ஞாயிறு, 27 மார்ச், 2011

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். 6. தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 10. பேசாமல் இருப்பது அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. Source: thoothuonline.com

காரைக்காலில் காங்., - என்.ஆர். காங்., மோதல்முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட 7 பேர் காயம்

காரைக்கால்:காரைக்காலில் காங்., - என்.ஆர். கட்சியினர் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். போலீசார் தடியடி தடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். திருநள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ., சிவா உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்தனர்.காரைக்கால் திருநள்ளார் தொகுதியில் கடந்த முறை ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.சிவா, காங்., முன்னாள் அமைச்சர் கமலக்கண்னை தோற்கடித்து வெற்றி பெற்றார். இம்முறை ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்ததால், கட்சி மாறிய பி.ஆர்.சிவா என்.ஆர்.காங்., சார்பில் திருநள்ளார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்., சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் போட்டியிடுகிறார். திருநள்ளார் தொகுதியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., தேர்தலில் நேருக்கு நேர் களம் இறங்கியுள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக அம்பகரத்தூர் சென்ற பி.ஆர்.சிவா இரவு அப்பகுதியில் இருந்த தொண்டர்களை சந்தித்தார்.அங்கு வந்த கமலக்கண்ணன் ஆதரவாளர்கள் இரவு 11 மணிக்குமேல் ஏன் பிரசாரம் செய்கிறீர்கள், பணம் பட்டுவாடா செய்யக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினரும் நள்ளிரவு 12 மணியளவில் செல்லூர் தனியார் சோப்பு கம்பெனி எதிரே தாக்கி கொண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவா காயமடைந்தார். அவருடன் சென்ற டிரைவர் கிருஷ்ணன், தீபன், ரமேஷ் உட்பட ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது.தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவா தரப்பினர் திருநள்ளார் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தடியடியால் ஆவேசமடைந்த சிவா தரப்பினர் போலீசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து சிவா தரப்பினர் கலைந்து சென்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., சிவா தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் நல்லம்பல் சென்று கமலக்கண்ணன் ஆதரவாளர்களான இளைஞர் காங்., துணைத் தலைவர் பிரபுவின் அம்பாசிட்டர் கார், சேத்தூர் இளைஞர் காங்., பாண்டியனின் இண்டிகா கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கலாநிதி என்பவரின் மோட்டார் சைக்கிளை அருகில் இருந்த குளத்தில் தூக்கி வீசினர்.திருநள்ளார் தொகுதியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., கட்சியினர் மோதிக்கொண்டதால் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. திருநள்ளார் நல்லம்பல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய 6 பேர் மற்றும் பெயர் தெரியாத கமலக்கண்ணன் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinamalar

திங்கள், 21 மார்ச், 2011

கட்சியிலிருந்து விலகுகிறார் திருநள்ளாறு மதிமுக எம்.எல்.ஏ.

காரைக்கால், மார்ச் 20: சட்டப் பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்க முடிவு செய்ததையடுத்து, திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா அக் கட்சியிலிருந்து விலகி, என்.ஆர். காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு, பேரவைத் தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வழக்குரைஞர் பி.ஆர். சிவா. தற்போதைய தேர்தலிலும் மதிமுகவில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார்.
ஆனால், அதிமுக கூட்டணியில் இடம் பெறாமல் தேர்தலைப் புறக்கணிப்பதாக மதிமுக எடுத்த முடிவு வெளியானதையொட்டி, பி.ஆர். சிவா ஞாயிற்றுக்கிழமை மாலை தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பலரும், கட்சி எடுத்த முடிவை நாம் ஏற்க முடியாது. 5 ஆண்டுகள் தொகுதிக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்த பி.ஆர். சிவா மீண்டும் போட்டியிட வேண்டும்.
அதற்கு அவர் என்.ஆர். காங்கிரஸில் இணைய வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், கூட்டத்தின் முடிவில் பி.ஆர். சிவா செய்தியாளர்களிடம் கூறியது: "கட்சி எடுத்த முடிவு குறித்து தொகுதி மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கட்சி எடுத்த முடிவு ஒரு பக்கம் இருந்தாலும், தொகுதியின் வளர்ச்சிக்காகத் தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாடுபட்டுள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரும்பாலானோரும் புதுவை முன்னாள் முதல்வர் என். ரங்கசாமியைச் சந்தித்து, என்.ஆர். காங்கிரஸில் இணைந்து, அக் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அதனால், மக்கள் விருப்பப்படி தேர்தலில் போட்டியிடுவேன் என்றார் அவர்.