திங்கள், 21 மார்ச், 2011

கட்சியிலிருந்து விலகுகிறார் திருநள்ளாறு மதிமுக எம்.எல்.ஏ.

காரைக்கால், மார்ச் 20: சட்டப் பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்க முடிவு செய்ததையடுத்து, திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா அக் கட்சியிலிருந்து விலகி, என்.ஆர். காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு, பேரவைத் தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வழக்குரைஞர் பி.ஆர். சிவா. தற்போதைய தேர்தலிலும் மதிமுகவில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார்.
ஆனால், அதிமுக கூட்டணியில் இடம் பெறாமல் தேர்தலைப் புறக்கணிப்பதாக மதிமுக எடுத்த முடிவு வெளியானதையொட்டி, பி.ஆர். சிவா ஞாயிற்றுக்கிழமை மாலை தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பலரும், கட்சி எடுத்த முடிவை நாம் ஏற்க முடியாது. 5 ஆண்டுகள் தொகுதிக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்த பி.ஆர். சிவா மீண்டும் போட்டியிட வேண்டும்.
அதற்கு அவர் என்.ஆர். காங்கிரஸில் இணைய வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், கூட்டத்தின் முடிவில் பி.ஆர். சிவா செய்தியாளர்களிடம் கூறியது: "கட்சி எடுத்த முடிவு குறித்து தொகுதி மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கட்சி எடுத்த முடிவு ஒரு பக்கம் இருந்தாலும், தொகுதியின் வளர்ச்சிக்காகத் தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாடுபட்டுள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரும்பாலானோரும் புதுவை முன்னாள் முதல்வர் என். ரங்கசாமியைச் சந்தித்து, என்.ஆர். காங்கிரஸில் இணைந்து, அக் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அதனால், மக்கள் விருப்பப்படி தேர்தலில் போட்டியிடுவேன் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக