சனி, 13 நவம்பர், 2010

காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை திட்டத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடுக: பி.ஆர். சிவா


காரைக்கால், நவ. 10: காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை திட்டத்துக்கான அறிவிப்பை ரயில்வே துறை உடனடியாக வெளியிட வேண்டும் என திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது:
நாகூரிலிருந்து காரைக்கால் வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு மத்தியில் இதில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலில் இருந்து புதுச்சேரி, சென்னைக்கு செல்லவேண்டுமெனில் நேரடி ரயில் பாதை இணைப்பு இல்லாததால், ஏற்கெனவே காரைக்கால் முதல் பேரளம் வரை இருந்து அகற்றப்பட்ட மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.
இது சம்பந்தமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஒத்துழைப்போடு மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி மூலம் மத்திய ரயில்வே அமைச்சகத்தை அணுகி காரைக்கால் - பேரளம் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 25 கோடிக்கான அனுமதி பெறப்பட்டது. இத் தகவலை மத்திய அமைச்சர் தெரிவித்து, வரும் 2011-ம் ஆண்டில் திட்டம் முடிக்கப்படும் என அறிவித்தார்.
எனவே, இந்தத் திட்டத்தை உடனே தொடங்க ஏதுவாக ரயில்வேத் துறை தனியாக ஒரு அரசாணை பிறப்பித்து திட்டத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றார் சிவா.
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக