ஞாயிறு, 14 நவம்பர், 2010

அரஃபா நோன்பு


ரமலான் மாத கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபா தின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும். அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி

அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஒரு உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காக சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணார கண்டு உணர்ந்திருப்பார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னை படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்பு தேடுவதும் பல மணித்துளிகளுக்கு இவ்வுலக சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது. அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக