திங்கள், 13 டிசம்பர், 2010

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்;

இந்தியாவைச்சேர்ந்த அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரம் தமிழர்கள் அரபகங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மூலம் இந்திய அரசிற்கு கணிசமான அந்நியச்செலவாணி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தாயகம் துறந்து வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களில் கவுரவமான பதவியில் இருப்பவர்கள் நீங்கலாக, மற்றவர்களில் பெரும்பாலோர் படும் இன்னல்களுக்கோ அளவில்லை.

வெளிநாட்டுப் பயணத்திற்காக போலி எஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் ஒருபுறம், அதையும் தாண்டி விமானம் ஏறி, வெளிநாட்டு மண்ணில் தடம் பதித்தவுடன், தாய்நாட்டில் போலி ஏஜெண்டுகள் கூறியபடி சலுகைகள் இன்றி வெறும் குறைவான சம்பளத்திற்கு அதிகநேரம் மாடாய் உழைத்து ஓடாய் தேயும் அவலநிலை. குறைவான ஊதியமும் மாதம் நிறைவானவுடன் வழங்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்து கழுத்தறுக்கும் கம்பெனிகளின் தொல்லை ஒருபுறம்; மறுபுறம் தாயகத்திலோ வட்டிக்கு பணம் தந்தவன் குடும்பத்தின் கழுத்தை நெருக்கும் அவலம் மறுபுறம். இவ்வாறு கம்பெனிகளில் ஏற்படும் இன்னல்களை எழுத்தால் வடித்து எம்பஸி எனப்படும் தூதரகம் சென்றாலோ, எடுத்தெறிந்து பேசும், ஏளனம் பேசும் அதிகாரிகள் சிலரின் கண்டுகொள்ளாமை. இதுபோக பணியாற்றும் நாட்டில் மரணம் சம்பவித்து விட்டாலோ, நஷ்டஈடு கிடைக்குதோ இல்லையோ, பாடி நாருவதற்கு முன் நாடுவந்து சேருமா என்பது கேள்விக்குறி. இத்தகைய வெளிநாட்டு கனவுலக வாழ்கையில் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஏராளமான இந்தியர்களின் நிலையை சீராக்கவே வெளியுறவுத்துறை என்ற ஒன்று உண்டு. ஆனால் அந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அவ்வப்போது சில நாடுகளுக்கு விசிட் அடித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு கரையேறிவிடுவார். அவர் கையெழுத்திட்ட தொழிலாளர் நலன் சார்ந்த விசயங்கள் அமுல்படுத்தப்படாமல் கரையான் அறித்ததை பாவம் அவர் எங்கே அறிவார்?இத்தகைய இன்னல்களுக்கு விடிவு தேவை என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் வெளிநாடுவாழ் தமது மாநில மக்களுக்காக தனி நலவாரியம் அமைத்து வரும் நிலையில், தமிழக அரசை நோக்கியும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை பலரால் பரவலாக வைக்கப்பட்டது.


அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் களமாக தேர்ந்தெடுத்தது முஸ்லிம் லீக் மாநாடு என்பதில் ஒருவகை மகிழ்ச்சியே. ஏனெனில் தமிழர்களில் அதிகமாக வெளிநாட்டில் அவதியுறுவது முஸ்லிம்களே!

இப்போது முதல்வரின் அறிவிப்பை பார்ப்போம்;

''தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, ``அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. என்று கூறியுள்ளார் முதல்வர்.


நலவாரியம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது என்றபோதிலும் அந்த வாரியம் பெயரளவில் இல்லாமல் வீரியமாக செயல்படுவதில்தான் முதல்வரின் என்னமும் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பதை முதல்வர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி: முகவை எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக