புதன், 15 டிசம்பர், 2010

காரைக்காலில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா?

காரைக்கால், டிச. 15: காரைக்காலில் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்தது முதல் காரைக்காலில் ஒரு பொது மருத்துவமனைதான் உள்ளது. மேலும், தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றும் இயங்குகிறது. வேறெந்த மருத்துவ வளர்ச்சியும் இங்கு இல்லை.
600 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. குறிப்பாக, இதயக் கோளாறு, சிறுநீரகச் சிகிச்சை, விபத்துச் சிகிச்சை, தலைப் பகுதி சிகிச்சைக்கு நிபுணர்கள் இல்லை.
இதுபோன்ற சிகிச்சை பெற தஞ்சாவூர் அல்லது புதுவைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. மேலும், சிடி ஸ்கேன் இருந்தும், அதை இயக்க நிபுணர் இல்லாததால், நோயாளிகள் இந்த வசதியைப் பெற வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. அதேபோல, சிறுநீரக டயாலிஸிஸ் பிரிவு ஏற்பாடு செய்வதில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட காரைக்காலுக்கு இந்த மருத்துவ வசதிகள் போதாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இங்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைநிலை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, வாரம் ஒருநாள் சிறப்பு சிகிச்சைக்கான நிபுணர்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்தும் வெற்றிகரமாக இல்லை. கடந்த சில வாரங்களாக மருத்துவக் குழுக்கள் வருவது இல்லை.
அதோடு, அரசு சார்பில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாம்.
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பாகச் செயல்படவில்லை என்ற குறை மக்களிடையே நிலவுகிறது. பெரும்பாலான நிலையங்கள் மிகவும் பாழடைந்த நிலையிலும், ஒப்பந்த மருத்துவர்களுமே இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் சிறப்பான அரசு மருத்துவமனை, மகளிர், குழந்தைகள் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, 8-க்கும் அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
இந்த நிலையில், காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைக்காக கையகப்படுத்தி வைத்துள்ளது. இங்கு காஞ்சி ஜயேந்திரர் தமது அறக்கட்டளை சார்பில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க புதுவை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல் புதுவை அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பிராந்தியமாக உருவாக்க, நட்சத்திர ஹோட்டல் கட்ட முன்வருவோருக்கு சுற்றுலாத் துறை அதிகபட்சமாக ரூ.1 கோடி மானியம் வழங்குகிறது. இதேபோல, காரைக்காலில் மருத்துவமனை கட்ட முன்வருவோருக்கும் அரசு மானியம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் கூறியது: புதுவையில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 1000 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இவர்களில் உள்ளூரில் மருத்துவமனை கட்ட முன்வருவோருக்கு குறிப்பிட்ட அளவு மானியம் அளிக்கும் முடிவை அரசு எடுக்கலாம்.
காரைக்காலில் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், எதிர்காலத்தில் மருத்துவ வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து விரைவான முடிவை புதுவை அரசு மேற்கொண்டால், காரைக்கால் மட்டுமல்லாது, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பயன்பெறுவர் என்றார் அவர்.
சுகாதார வசதியில் காரைக்கால் தன்னிறைவு பெற, தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதும், மருத்துவமனை கட்ட நிறைவான மானிய உதவித் திட்டங்களை விரைவாக முடிவெடுத்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக